பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியான மெல்காட்டில், கரோனா பரவலின்போது அரசு போதிய அளவு கவனம் செலுத்தாததால் பசிக்கொடுமையின் பாதிப்புகள் அதிகரித்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்ததாகவும் அப்பகுதியினரும், ஊட்டச்சத்து நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, 29 நாள்கள் முதல் ஒரு வயது நிரம்பிய குழந்தைகளும், கருப்பையிலேயே 13 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக இக்குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், அமராவதியின் சுயேட்சை எம்.பியான நவநீத் கவுர் ராணா இந்த விவகாரத்தை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். மேலும், அமராவதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் இறப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நவநீத் கடிதம் எழுதியும் உள்ளார்.
தனது கடிதத்தில், “மாநில அரசு இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. இவ்விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகத்தையும் விசாரிக்க வேண்டும். ஏனெனில் மகாராஷ்டிராவின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரால் வேலை வழங்கப்பட்ட நிறுவனங்களின் தொழிலதிபர்களை உச்ச நீதிமன்றம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
பழங்குடிப் பெண்களின் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்திற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் மாநில நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்: இந்திய மூவர்ணத்தில் மிளிர உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலிஃபா!