பெங்களூரு: 'கார்டன் சிட்டி' என அழைக்கப்படும் பெங்களூருவுக்கு இது போதாத காலம். அந்நகரில் கடந்த 15 நாள்களில் 3 கட்டடங்கள் சீட்டுக் கட்டுப்போல் சரிந்துள்ளன.
இதையடுத்து நகரில் உள்ள ஆபத்தான கட்டடங்களை கண்டறியும் பணியை மாநில அரசு முடுக்கிவிட்டது. இந்நிலையில் நகரில் 409 கட்டடங்கள் ஆங்காங்கே இடிந்தும், பெயர்ந்தும் விழுந்துள்ளன. 404 கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன எனத் தெரியவந்துள்ளது.
முன்னதாக பாழடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து விவாதிக்க சமீபத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வருவாய்த்துறை அமைச்சர் நகரத்தில் உள்ள எட்டு மண்டலங்களிலும் ஆபத்தான கட்டடங்களை கணக்கெடுப்பு நடத்த மண்டல ஆணையருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில், 185 கட்டடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இப்போது, 404 கட்டடங்கள் ஆபத்தில் உள்ளன என்று கணக்கெடுப்பு நடத்திய உறுப்பினர்களில் ஒருவரான பொறியாளர் ஒருவர் கூறினார்.
இதையும் படிங்க : பெங்களூருவில் தொடர்ந்து சரியும் கட்டடங்கள்; 10 நாள்களில் 3 விபத்து