இந்தியாவில் கரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. வைரஸ் பரவலை தடுத்திட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
கரோனா பரவலுக்கு தலைநகர் டெல்லியும் விதிவிலக்கு அல்ல. தினந்தோறும் ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை அங்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரபல சர் கங்கா ராம் மருத்துவமனையில் பணியாற்றும் 37 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் லேசான பாதிப்பு உள்ள மருத்துவர்கள், வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். பாதிப்பின் வீரியம் அதிகமாக இருக்கும் ஐந்து பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பாதிப்புக்குள்ளான மருத்துவர்களில் பெரும்பாலானோர், கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் ஆவர்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக கரோனாவுக்கு எதிரான போரில், சர் கங்கா ராம் மருத்துவமனை முக்கியப் பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பணியிடங்களில் நேரடியாக இனி கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - கர்நாடக அமைச்சர்