இந்தூர் : மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் அருகே உள்ள படேல் நகரில் பெலேஷ்வர் கோயில் உள்ளது. நேற்று (மார்ச் 30) ஸ்ரீராம நவமியையொட்டி காலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் படிக்கிணற்றில் ஏராளமான பக்தர்கள் ஏறி நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென படிக்கிணறு இடிந்து விழுந்தது. கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்த 25 க்கும் மேற்பட்டோர் தவறி உள்ளே விழுந்தனர். படிக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. போலீசாருடன் இணைந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படிக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை 35 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக தண்ணீரில் மூழ்கி 35 பேர் உயிரிழந்ததனர். தண்ணீர் மிதந்த சடலங்களை கயிறு கட்டி ராணுத்தினர் மீட்டனர்.
ஏறத்தாழ 18 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 16 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவின் 50 உறுப்பினர்கள், தேசிய பேரிடம் மீட்பு குழுவின் 15 பேர், போலீசார், ராணுவம் என பலர் ஈடுபட்டும் 35 பேர் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. 31 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதுகுறித்து இந்தூர் காவல் ஆணையர் மார்க்கண்ட் தியோஸ்கர் கூறுகையில், "30-35 பக்தர்கள் கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் நிலைமை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் கிணற்றில் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : India Coronavirus Cases: கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம் தெரியுமா?