அகமதாபாத்: வருவாய்த்துறை நுண்ணறிவு இயக்குநரகம் சோதனை மேற்கொண்டதில் ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்புடைய 2,988.22 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர நிறுவனம் ஒன்றுக்கு முகத்துக்கு பூசும் பவுடர் கொண்டுவரப்பட்ட கண்டெய்னர்களில் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.
வருவாய்த்துறை நுண்ணறிவு இயக்குநரகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு கண்டெய்னர்களை முந்த்ரா துறைமுகத்தில் சோதனை செய்தனர்.
அதில் ஒரு கண்டெய்னரில் 1,999.58 கிலோ ஹெராயினும் மற்றொரு கண்டெய்னரில் 988.64 கிலோ ஹெராயினும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு கண்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக டெல்லி, சென்னை, குஜராத்தில் அகமதாபாத், மாண்ட்வி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த கடத்தலில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ஹெராயின் பறிமுதல் இது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பண மோசடி விவகாரம்: சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை