காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கியிருந்த போதிலும், ஆளும் பாஜக அசாமில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. பாஜகவின் புதிய கூட்டணி கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்), போடோலாண்ட் பகுதிகளில் 6 இடங்களை வென்று பாஜகவுக்கு உதவ முடிந்தது. அதே நேரம், போடோலாண்ட் மக்கள் முன்னணியின் (பிபிஎஃப்) இடங்களையும் குறைத்து, அதன் மூலம் பாஜக-எதிர்ப்பு கூட்டணியின் பலத்தையும் குறைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் சில ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள - தகவல் அறியும் ஆர்வலர் அகில் கோகோய், ஒருமுறைகூட பிரச்சாரமே செய்யாமல் சிப்சாகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் (Aasu) முன்னாள் தலைவர் லுரிஞ்சோதி கோகோய் - நஹர்காடியா மற்றும் துலியாஜன் ஆகிய இரு தொகுதிகளிலும் தனது வெற்றியை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார்.
சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோன்வாரிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியே மிகப்பெரிய அளவில் பரப்புரை செய்தபோதும் அகில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஆனால், லூரின்ஜோதி தமது இரு தொகுதிகளையும் பாஜக வேட்பாளர்கள் தரங்கா கோகோய், தேராஸ் கோலா ஆகியோரிடம் இழந்துவிட்டார்.
புதிதாக அமைக்கப்பட்ட ரைஜோர் தளம் கட்சியின் சார்பில் அகில் கோகோய் தேர்தலில் போட்டியிட்டார். லூரின்ஜோதி கோகோய், தேர்தலுக்கு சற்று முன்பாக உதயமான புதிய அரசியல் கட்சியான அசாம் ஜாதியா பரிஷத்தின் (AJP) சார்பில் போட்டியிட்டார். எப்படியிருந்தாலும், எதிர்பார்த்தபடி இரண்டு புதிய கட்சிகளுமே - ஒரு வலுவான பிராந்திய முன்னணியாக அப்பகுதி மக்களின் ஆதரவைப் பெற தவறிவிட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்து பாஜக தேர்தலில் பரப்புரை செய்தது. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், இரண்டு புதிய பிராந்தியக் கட்சிகளும் - வெற்றிக்கு உதவாத குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு (CAA) எதிரான உணர்வைப் பெற முயச்சித்தன. மதச் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளைத் திரட்டுவதையே நோக்கமாகக் கொண்ட அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) உடனான காங்கிரஸின் கூட்டணியும் இந்த முறை எந்தப் பலனையும் தரத் தவறிவிட்டது.
அசாமில் பாஜக தலைமையிலான அரசு, 2019 முதல் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு சட்டத்திற்கு (CAA) எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை சந்தித்த போதிலும், 'CAA-வை விட பத்ருதீன் அஜ்மல் பெரிய அச்சுறுத்தல்' என்று அசாம் மக்களை பாஜக சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை குறிவைத்து, அதாவது - அசாமில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அஜ்மல் துணை முதலமைச்சராக இருப்பார் என்று பாஜக பரப்புரை செய்தது.
பெரிய அளவிலான மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், குறிப்பாக உயர்நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கும் திட்டம், மாநிலத்தில் உள்ள சுமார் 22 லட்சம் குடும்பங்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் (DBT) மூலம் மாதத்திற்கு ரூ. 830 ரூபாய் வழங்கும் 'ஒருனோடோய்' திட்டம் ஆகியவையே பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகத் தோன்றும் மற்ற அம்சங்கள் ஆகும்.
இந்த நேரத்தில் ஏராளமான பெண்கள் வாக்களிப்பார்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் பெண்களுக்கான சிறிய அளவிலான கடனைத் தள்ளுபடி செய்வதற்கான பாஜகவின் அறிவிப்பும் ஆளும் கூட்டணிக்கு சில அதிசயங்களைச் செய்திருப்பதாகக் கருதப்படுகிறது. பாஜக தலைமையிலான அரசு 2020 டிசம்பரில், அசாம் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ( கடன் வழங்குவதை ஒழுங்குபடுத்துதல்) மசோதா, 2020-ஐ நிறைவேற்றியது. மாநில அரசின் மதிப்பீட்டின்படி, அசாமில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் ரூ.1,200 கோடி ரூபாய் அளவுக்கு முறைப்படுத்தப்படாத சிறு கடன்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
"இந்த முறை வாக்குகள் 65 சதவீதம் ஒரு பக்கமாகவும் 35 சதவீதம் ஒரு பக்கமாகவும் இரு துருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் சார்ந்த அரசின் திட்டங்களும் இந்த முறை தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் கட்சி, அரசின் திட்டங்களால் பயன் பெறுபவர்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியதால், அதிக வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்று தேர்தல் முடிவுகள் குறித்து அசாமின் மூத்த பத்திரிகையாளரும் ஆசிரியருமான பிரசந்தா ராஜ்குரு கூறியுள்ளார்.
"குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அசாம் உடன்படிக்கையின் 6ஆவது பிரிவு அமல்படுத்தப்படாதது குறித்து பாஜகவுக்கு எதிராக கடந்த காலங்களில் போராட்டங்கள் நடந்துவந்தன. இருந்தபோதிலும் அது, தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களைப் பாதிக்கத் தவறிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் தொடங்கிய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் காரணமாக பாஜகவும் 2016 தேர்தலில் பெற்ற தனது வாக்கு விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது” என்று அரசியல் ஆய்வாளரும், கட்டுரையாளருமான பிரஜென் தேகா தெரிவித்துள்ளார்.