டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி பெரும் வன்முறை சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்கு சென்ற போராட்டக்காரர்கள், கம்பத்தில் ஏறி தங்களின் கொடிகளை ஏற்றினர். இதனால் அங்கு தொடர் பதற்றம் நிலவிய நிலையில், துணை ராணுவ படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அகற்றினர். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய முக்கிய விவசாய சங்கங்கள், வன்முறைக்கு காரணம் சமூக விரோதிகள் எனக் கூறி டிராக்டர் பேரணியை நிறுத்தினர்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் மட்ட அலுவலர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில், துணை ராணுவ படையை குவிக்க முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதிகளில் இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துவாரகை மாவட்டத்தில் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை சம்பவத்தில் 30 காவலர்கள் படுகாயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் எட்டு பேருந்துகள், 17 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தாக்கியதில் 83 காவலர்கள் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.