அம்ரேலி: குஜராத் மாநிலம் அம்ரேலியில் உள்ள சலாலா கிராமத்தை சேர்ந்த ஒரு ஜோடிக்கு நேற்று (மார்ச் 13) திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடிந்து கொண்டிருந்தது. இந்த திருமணம் நடக்கும் மண்டபத்தில் மணமக்கள், இரு வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
தாலி கட்ட அரை மணி நேரமே மீதம் இருந்த நிலையில், மண்டபத்தில் சலசலப்பும், ஆரவாரமும் கேட்டுள்ளது. அதனால், மணமக்கள் தங்களது அறைகளை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மண்டபத்துக்கு உள்ளேயே இரண்டு காளைகள் ஒன்றோடு ஒன்று முட்டிமோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதை குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு முயற்சித்தும் தடுக்க முடியவில்லை.
இதனால் காளைகள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருப்பதே நல்லது என்று முடிவெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்துக்குள் இருந்த அனைவரும் பார்வையாளர்களாக மாறி ஆரவாரம் செய்ய தொடங்கிவிட்டனர். சில பேர் பயந்து மண்டபத்தை விட்டே ஓடி விட்டனர். வெகு சிலர் தைரியமாக காளைகளின் சண்டையை வீடியோ எடுக்கவும் தொடங்கினர். இப்படியே அரை மணி நேரமாக காளைகள் மண்டபத்துக்கு உள்ளேயே இருந்துள்ளன. அதுவரை திருமணத்தை பற்றி யாரும் கவலைப் பட்டத்தாக தெரியவில்லை. இதனால், திருமண ஜோடிகள் இலவு காத்த கிளிகள் போல காளைகள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்தனர்.
இதையும் படிங்க: தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விளக்குகளை அணைத்தால் கர்ப்பகால நீரிழிவு நோய் அபாயம் குறையும்: ஆய்வில் தகவல்
இதையடுத்து காளைகள் சென்ற பின் அனைவரும் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர். இந்த காளைச் சண்டை காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எதிர்பாராத விதமாக காளைச் சண்டை நடந்ததால், திருமணம் அரைமணி நேரம் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் வெகு சிறப்பாக திருமணம் நடந்து முடிந்ததாக மணமக்களின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருமணத்துக்கு வந்தவர்கள் கூறுகையில், மேள தாளங்கள், இசை கச்சேரிகள், நடனங்கள் உடன் திருமணங்களை பார்த்துள்ளோம். ஆனால். இப்படியொரு திருமணத்தை நாங்கள் கண்டதில்லை. இந்த திருமணத்தை யாராலும் மறக்க முடியாது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படாதது, திருமண உற்சாகத்தை சற்றும் குறைக்கவில்லை எனத் தெரிவித்தனர். இதனிடையே இந்த காளைகளின் சண்டை வீடியோ சமூக வலைதளங்களில், வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த காளை வீடியோ திருமண வீடியோ பதிவில் இடம் பெறும் என்று மணமக்கள் தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Same Sex Marriage: ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்