தெலங்கானா: நாடு முழுவதும் கோடை வெயில் கோரத்தாண்டவமாடி வருகிறது. பல மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அனல் காற்றால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தெலங்கானாவில் கடந்த 4 வாரங்களில் சுமார் 17 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கணக்கில் வராத இறப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தெலங்கானாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்... மயங்கி விழுந்த பறவைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!