காசர்கோடு: கேரளா காசர்கோடு மாவட்டத்தில் தரமற்ற உணவை உட்கொண்டதால் பல மாணவர்கள் நோயுற்று மருத்துவமனையில் நேற்று (மே 1) அனுமதிக்கப்பட்டனர். அதில், கரிவல்லூரை சேர்ந்த தேவானந்தா என்ற 16 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்கள் உணவருந்திய கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் டியூஷன் சென்டர் அருகே உள்ள கடையில், ஷவர்மா சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, அமைச்சர் எம்.வி கோவிந்தன் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு, பரிமாறப்படும் உணவுகளின் தரத்தை அரசு உறுதிசெய்யும் என்று தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் ஏ.வி. ராமதாஸ் கூறுகையில்,"இதில் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறோம். எனவே, அருகாமையில் பணியாற்றிவரும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் செருவத்தூர் பொது மருத்துவமனைக்கு விரைந்து செல்லும்படி உத்தரவிட்டுள்ளோம்.
லேசான பாதிப்புள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கவும், தீவிரமாக பிரச்சனை உடையவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!