பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. நேற்று (ஜுன்.7) மட்டும் 11 ஆயிரத்து 958 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 7 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 340 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,992 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் புள்ளிவிவரங்களில் அதிர்ச்சி தகவலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மே 21ஆம் தேதி நிலவரப்படி, வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த 778 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஜூன் 2 ஆம் தேதி நிலவரப்படி, வீட்டு தனிமைப்படுத்தலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,599 ஆக அதிகரித்துள்ளது.
பலர் கரோனா பரிசோதனை செய்வதற்கு முன்பே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டு தனிமைப்படுத்தலில் இறப்பதற்கான காரணம் போதிய மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் இல்லாதது தான் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
தற்போது பெங்களூரில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 340 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 3 ஆயிரத்து 400 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 940 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். வீட்டுத் தனிமையில் உள்ள கோவிட் -19 நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க சுகாதாரத் துறை, மாநகராட்சி பணியாளர்களில் பற்றாக்குறை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.