இந்தூர் : மத்திய பிரதேச மாநிலம் இந்துரைச் சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித். 15 வயதான தனிஷ்கா சுஜித் தற்போது இந்தியா அறிய விரும்பும் நபராக உருவெடுத்து உள்ளார். வெறும் 15 வயதேயான தனிஷ்கா விரைவில் தனது இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வை எழுத உள்ளார். இந்த வயது உடையவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் நிலையில், அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இளங்கலை தேர்வுக்காக தனிஷ்கா காத்து இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனாவால் தந்தை மற்றும் தாத்தாவை இழந்த தனிஷ்கா தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிறு வயது முதலே படிப்பில் படு சுட்டியாக காணப்படும் அவர், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கையோடு நேரடியாக 12 ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொண்டு உள்ளார்.
தனது 13 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்வையும் ஊதித் தள்ளிய தனிஷ்கா, தனது அதீத புத்திக் கூர்மையால் பலரை கவர்ந்து உள்ளார். அப்படி அவரால் கவரப்பட்டவர் தான் தேவி அகல்யா பல்கலைகழத்தின் சமூக அறிவியல் துறைத் தலைவர் ரேகா அச்சர்யா. தனிஷ்கா சுஜித்தை அழைத்து தன் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்து உள்ளார் ரேகா.
பி.ஏ. உளவியல் (Psychology) துறையில் தனிஷ்காவிற்கு இடம் கிடைத்து உள்ளது. கூரிய அறிவுக் கூர்மையால் நுழைவு தேர்வில் தனிஷ்கா தேர்ச்சி பெற்றதை கண்டு அதிர்ந்து போன பேராசிரியர்கள், அவருக்கு என தனியாக சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். அதன் விளைவு வரும் 19 ஆம் தேதி தனது இளங்கலை பட்டத்திற்கான இறுதித் தேர்வை தனிஷ்கா எழுத உள்ளார்.
அந்த வகையில் தனிஷ்காவுக்கு மற்றொரு முத்தாய்ப்பாக பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடந்த 1 ஆம் தேதி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இந்திய ராணுவத்தின் ஒருங்கிணைந்த தளபதி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தனிஷ்காவுக்கு கிடைத்து உள்ளது.
பிரதமர் மோடியுடன் 15 நிமிடம் கலந்துரையாடிய மாணவி தனிஷ்கா விரைவில் இளங்கலை பட்டம் முடிக்க உள்ளதாகவும் அதன் பின் அமெரிக்கா சென்று சட்டம் படிக்க படித்து வருங்காலத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறி உள்ளார்.
மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வழக்கறிஞர்கள் வாதாடும் திறனை பார்த்து கற்றுக் கொள்ளுமாறு மாணவியை ஊக்கப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது வன்முறையா ? - உண்மை உடைத்த நிர்மலா சீதாராமன்!