ஹைதராபாத்: சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயவுள்ள இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று நினைத்து இன்று நிறைவேற்றப்படும் திட்டம் அல்ல, கடந்த 15 ஆண்டுகளாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியின் அடுத்த கட்ட இலக்கு.
சந்திரயான் 3 வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வரும் நிலையில் நிலவின் தென் துருவத்தில் முதல் அடியை வைத்தது இந்தியாதான். இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவவுள்ளது. முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கேட் மூலம் விண்ணில் பாய்கிறது.
பூமியிலிருந்து சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கலம் எங்கிருந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும். தகவல்களை எப்படித் திரட்டும், இதனால் மனித குலத்திற்குக் கிடைக்கப்போகும் நன்மை என்ன? சூரியனில் ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? 15 ஆண்டுக்கால இஸ்ரோ விஞ்ஞானிகள் போராட்டம் எதற்காக? உள்ளிட்ட பல கோணங்களில் கேள்விகள் எழலாம். ஆதித்யா எல்-1 இதன் பெயரே சூரியனின் மற்றோரு பெயரைத் தாங்கி நிற்கிறது.
ஆதித்யா என்ற பெயர் இயற்கையின் தலைவன் என்பதையும் குறிக்கும். சூரியன், சூரிய குடும்பத்தின் தலைவன் அது மட்டும் இன்றி இந்த பிரபஞ்சம் செயல்படச் சூரியன் முக்கியமான ஒரு நட்சத்திரம். மற்ற கிரகங்களோடு ஒப்பிடுகையில் சூரியன் பூமிக்கு மிக அருக்கில் இருக்கும் நிலையில் உலக நாடுகள் பல சூரியன் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது முதல் விண்கலத்தை விண்ணில் செலுத்தி சூரியனை ஆய்வு செய்யவுள்ளது.
அதற்காகப் பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்-௧ என்கின்ற புள்ளியில் ஆய்வு மையத்தை நிறுவி 24 மணி நேரமும் சூரியனை நோக்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இதற்காக அந்த விண்கலத்தில் 7 பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் இருக்கும் நான்கு பேலோடுகள், சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் எனவும், 3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி மற்றும் ஆதித்யா ஆய்வு மையத்தைச் சுற்றியுள்ள எல்-1 பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்யும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எல்-1 எனும் புள்ளியைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து விளக்கியுள்ள விஞ்ஞானிகள் சூரியனுக்கும் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கும் இடையே 5 சமநிலை புள்ளிகள் இருக்கிறது எனவும் அதில், எல்.1 சமநிலை புள்ளியிலிருந்து மட்டுமே சூரியனை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ய முடியும் எனவும் கூறியுள்ளனர். மற்ற நான்கு சமநிலை புள்ளிகள் இந்த செயல்பாட்டிற்கு உகந்தது அல்ல எனவும் விளக்கியுள்ளனர். இந்த சமநிலை புள்ளிதான் விண்கலம், பூமி, நிலவு, உள்ளிட்ட அனைத்தையும் சீரான நிலையில் நிலைநிறுத்துகிறது.
இதை ஏன் சமநிலை புள்ளி என்கிறார்கள் என்றால் இந்த புள்ளியில்தான் சூரியனின் ஈர்ப்பு விசை அதிகமாகவும் பூமி உள்ளிட்ட கிரகங்களில் ஈர்ப்பு விசை குறைவாகவும் இருக்கும் எனவும் இதனால்தான் அவை சரியாக நிலைநிற்கிறது எனவும் அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். சூரியனில் மேற்கொள்ளும் இந்த ஆய்வின் மூலம், காமா, எக்ஸ்ரே, ரேடியோ கதிர், இன்ஃப்ராரெட், புற ஊதா கதிர் உள்ளிட்ட பல சூரிய கதிர்களின் வெளியேற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும் எனவும் இது அறிவியல் பூர்வமாக எதிர்கால மனிதக் குலத்திற்கு மிக அவசியமான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரியனில் உண்டாகும் சூரிய காந்த புயல், அதீத வெப்பம், காலநிலை மாற்றத்திற்கான காரணம் உள்ளிட்ட பல தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும் எனவும் அதற்கு ஏற்ப மனிதக் குலத்தைத் தயார்ப் படுத்த முயற்சிக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'லாலாலா லால லாலாலா..’ ஹம்மிங் செய்தால் இனி யூடியூப்பில் பாடல் கேட்கலாம் - வந்தாச்சு புது அப்டேட்!