கேரளா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அனில்குமார் - ஷாலினி தம்பதியினரின் 15 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவர் அண்மையில் ஓடை நீரில் குளித்துள்ளார். அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், ஆலப்புழா மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். மூளையை உண்ணும் அமீபாவின் தாக்குதலால் ஏற்படும் அரிய வகை நோயால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, "மாணவர் ஓடையில் குளித்த காரணத்தால் இந்த அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் காணப்படும் நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) என்ற அமீபா, மனிதர்கள் குளிக்கும்போது அவர்களது மூக்கு வழியாக நுழைந்து மூளையை பாதிக்கும். இந்த அமீபா மூளையின் செல்களை அழிக்கும். இதனை மூளையை உண்ணும் அமீபா என்று கூறுவார்கள். இந்த அரிய வகை நோய் கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். இந்த அமீபா தாக்கினால் ஒன்று முதல் இரண்டு வாரங்களில் அறிகுறிகள் காணப்படும். தொடக்கத்தில் கடுமையான தலைவலி, வாசனை- சுவையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அமீபா தண்ணீரின் மூலம் பரவுவதால், மக்கள் அசுத்தமான நீரில் குளிப்பது, முகம் கழுவுவது, வாய் கொப்பளிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், மழைக்காலங்களில் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்" என்று கூறினர்.
முன்னதாக கடந்த ஆண்டு தென் கொரியாவில் இந்த மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் 50 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். அந்த நபர் தாய்லாந்து சென்று திரும்பிய நிலையில் இந்த அமீபா தாக்குதல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இஸ்ரேல் நாட்டில் 36 வயது நபர் ஒருவர் இந்த நோயால் உயிரிழந்தார். தரவுகள்படி, உலகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் வெகு சிலர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர், பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிட்டனர்.