டேராடூன் : உத்தரகாண்டில் ஆற்றங்கரையோரம் இருந்த மின் டிரான்ஸ்பாமர் வெடித்து மின் கசிந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் நமாமி கங்கை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கை நதியை புதுப்பித்தல் மற்றும் மாசுபாட்டை தவிர்த்து பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏறத்தாழ 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திட்டப் பணிகளின் போது, காலை 11.35 மணி அளவில் மின் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் அந்த பகுதியில் இருந்த 15 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விபத்தில் காவல் உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் இரண்டு பேர் ஹெலிகாப்டர் மூலம் எய்மஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோபேஸ்வரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆட்சியர் தலையிலான குழு விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தன் ட்விட்டர் பக்கத்தில், "சமோலியில் மின்சாரம் தாக்கியதில் பலர் உயிரிழந்ததாக மிகவும் வேதனையான செய்தி கிடைத்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து ஆட்சியர் தலைமையிலான குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார். அதேநேரம் விபத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மூன்று காவல் ஆய்வாளர்கள், மற்றும் மூன்று காவலர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : தேசிய ஜனநாயக கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!