இந்தூர் : கடந்த சில ஆண்டுகளாக கடும் வயிற்று வலி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த 41 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடையிலான கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் செஹூர் மாவட்டத்தை சேர்ந்த ஷீத்தல் என்ற 41 வயது பெண்மணி கடந்த சில ஆண்டுகளாக கடும் வயிற்று வலி உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அமரும் போதும், நடைபயணம் மேற்கொள்ளும் போதும் பெண்மணி கடும் அவதிக்குள்ளாகி உள்ளார்.
இதையடுத்து இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கருப்பை பகுதியில் கட்டி போன்று இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏறத்தாழ 2 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடையிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக 15 கிலோ எடையிலான கட்டியை சுமந்து கொண்டு பெண் உயிர் வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தக்க சமயத்தில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், நாளடைவில் இந்த கட்டி புற்றுநோயாக மாறக் கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏறத்தாழ 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், பெண் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் இதற்கு முன் 15 கிலோ எடையிலான கட்டி எந்த மருத்துவமனைகளிலும் அகற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் இதுதான் முதல் முறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக ஜெய்ப்பூரில் 68 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 16 கிலோ எடையிலான கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்து இருந்தனர். ஜெய்ப்பூரில் உள்ள பகவான் மஹாவீர் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தினர். ஏறத்தாழ மூன்று முதல் நான்கு மாதங்களாக கட்டியுடன் பெண் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதை கண்டறிந்தனர்.
சிறுநீரகம் மற்றும் முக்கிய தமனிகளை பாதிக்கும் அளவுக்கு பெண்ணின் வயிற்றில் கட்டி வளர்ந்து இருந்தது தெரிய வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் 16 கிலோ எடை கட்டியை மருத்துவர்கள் அகற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சரத் பவார் - அஜித் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் புயல் வீசுமா?