ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள சனத் நகரில் வசித்துவருபவர், கணித ஆசிரியரான பிலால் அகமது மிர். இவர் தான் 15 லட்ச ரூபாய் செலவில் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய சோலார் காரை உருவாக்கி அசத்தியுள்ளார்.
இதுகுறித்து பிலால் அகமது கூறுகையில், 'இந்தக் காரை சாதாரண மனிதனும் வாங்க முடியும் எனவும், இந்த கார் பயன்படுத்தும்போது சாதாரண மனிதர்கள் ஆடம்பரமாக உணர்வார்கள் எனவும்' தெரிவித்தார்.
'மெர்ஸிடிஸ், ஃபெராரி, பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த கார்களைப்போல இந்த காரை உபயோகப்படுத்தும்போது சாதாரண மனிதர்கள் தங்களது கனவு நனவானதாக கருதுவார்கள்' என்றார்.
ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிலால் அளித்த பேட்டி: '2009ஆம் ஆண்டில் இந்த காரை தயாரிக்கும் பணியில் களமிறங்கினேன். சில உபகரணங்கள் கிடைக்காததால் சென்னைக்கு சென்று சோலார் பேனல் தயாரிப்பாளர்களிடம் தேவையான உபகரணங்களையும் அதன் உற்பத்தியாளர்களிடம் பல அறிவுரைகளையும் பெற்று தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன்.
காஷ்மீரில் உள்ள வானிலை பல நேரங்களில் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் சோலார் காரை தயாரிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. நிலவும் வானிலைக்கு ஏற்பத்தொடர் சோதனைகள் மேற்கொண்டு வாகனத்தை உருவாக்க வேண்டி இருந்தது.
காரில் பொருப்பத்தப்பட்டுள்ள bonnet , நகரும் கதவுகளால் சோலார் பேனல்கள் சூரிய சக்தியை சரியாகப் பெற முடியும். மேலும் கார் மீது பனி படர்ந்தால் அதனை அகற்ற ரிமோட் கண்ட்ரோல் உண்டு.
இந்த கார் , காரீய - அமில பேட்டரி பயன்படுத்துவதால் செயல்திறன் நன்றாக உள்ளது; மைலேஜும் கிடைக்கிறது; விரும்பினால் லித்தியம் பேட்டரிகளையும் காரில் பொருத்திக் கொள்ளலாம்' என்றார் பிலால் அகமது மிர்.
சோலார் கார் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என பிலால் அகமது மிர் நம்பிக்கை தெரிவித்தார்.