கௌசாம்பி: உத்தரப்பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி கருவுற்றார். சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அவரது தந்தை முடிவு செய்தார். அதன்படி, கருக்கலைப்பு செய்ய அனுமதிகோரி நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு கருக்கலைப்பு செய்யப்படவில்லை. பின்னர் அந்த சிறுமி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார். இந்த நிலையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். ஆனால், சிறுமியின் தந்தை இந்த குழந்தையை ஏற்க மறுத்துவிட்டார். மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அந்த குழந்தையை அவர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
சிறுமியை படிக்க வைக்க ஆசைப்பட்டதாகவும், தற்போது பாலியல் வன்கொடுமையால் பிறந்த இந்த குழந்தையால் மகளின் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டதாகவும் சிறுமியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிகார் போலி மதுபானம் விவகாரம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்வு..