இந்தூர்(மத்தியப் பிரதேசம்): இந்தூரைச் சேர்ந்த அவி சர்மா(12) என்ற அசாத்தியத் திறமை உள்ள சிறுவன், பெரியவர்களால் கூட செய்துமுடிக்க முடியாத ஒரு சாதனையை நிகழ்த்திக்காட்டி, மத்தியப் பிரதேசத்தின் அதிசய சிறுவனாகத் திகழ்கிறார்.
இவர், குரலால் கணினியைக் கட்டுப்படுத்தும் மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளார். அந்த மென்பொருளுக்கு ‘MADHAV(My Advance Domestic Handling AI Version)' என்று பெயரிட்டுள்ளார்.
அனைத்து மக்களும் பயன்படுத்தலாம்:
தற்போதையச் சூழலில், குரலை வைத்து கணினியைக் கட்டுப்படுத்த ‘Alexa' என்கிற மென்பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது.இந்த மென்பொருளைப் பயன்படுத்த விலை உயர்ந்த சாதனங்கள் தேவைப்படும்.
ஆனால், அவி சர்மா கண்டுபிடித்த இந்த மென்பொருளை எளிதில், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கணினியைப் பற்றியப் போதிய அறிவு இல்லாதவர்கள் கூட பயன்படுத்தலாம் என்பது இதனின் கூடுதல் சிறப்பு.
இதை அவி சர்மா, ’python' எனப்படும் கணினி மொழியைக் கற்றுத் தேர்ந்து குரலிலேயே கணினியைக் கட்டுப்படுத்தும் மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளார்.
குரல் சாதனம் தேவையில்லை:
இந்த கண்டுபிடிப்பின் ஆச்சரியமான அம்சமே, இதைப் பயன்படுத்த எந்த குரல் சாதனமும் தேவையில்லை. அதற்காக நிறைய பணம் செலவலிக்க அவசியம் இல்லை.
இதுவரை நடப்பில் உள்ள ‘Alexa' உட்பட அனைத்து குரல் மூலம் கட்டுப்படுத்தும் மென்பொருளும் சாதனங்கள் இல்லாமல் இயங்குவதில்லை.
அப்படியிருக்க,அவி சர்மா கண்டுபிடித்த இந்த ‘மாதவ்’ எனும் மென்பொருள் எந்த சாதனங்களும் இன்றி இயங்குவது எல்லோரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மென்பொருளை ஒரு முறை கணினியில் பதிவிறக்கம் செய்தால் போதும். பின் அனைத்து கணினி செயல்பாடுகளையும் நாம் குரல் மூலமே இயக்கலாம்.
அனைத்து செய்திகளையும் சொல்லும் கணினி:
இன்று,அவி சர்மா தனது இல்லத்திலேயே தன் கணினியுடன் உட்கார்ந்து பேசியபடியே அதை இயக்கிவருகிறார். கணினியைக் குரல் மூலம் ‘சட் டவுன்’ செய்யும் முதல் மென்பொருள் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் இது எல்லோரும் கணினியை எளிதாகப் பயன்படுத்த பேருதவியாகத் திகழும். அதனால் மாற்றுத்திறனாளிகளும் வருங்காலத்தில் கணினியை இயக்கலாம்.
மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு சமர்ப்பணம்!:
இந்தத் திட்டத்தை,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு சமர்ப்பிப்பதாக அவி சர்மா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், வருங்காலத்தில் தன் கண்டுபிடிப்பு எளியமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று அவி சர்மா விரும்புகிறார். தனது கண்டுபிடிப்பை எந்த விலையுமின்றி இந்திய அரசிற்குத் தரத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Petrol Price Drop: பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு