வதோதரா(குஜராத்): ஹரியானா, சார்க்கி தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமாபாய். 106 வயதான ஓட்டப்பந்தய வீராங்கனை. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயம் சீனியர் பிரிவில் 35 வயதிற்கு மேற்பட்ட 1,440 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ரமாபாய் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து ரமாபாய் குடும்பத்தினர் கூறுகையில், "ரமாபாய் ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எங்கள் குடும்பத்தினருக்கும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். ரமாபாய்தான் எங்களுக்கு முன்னுதாரணம். இந்தப் போட்டிக்காக ரமாபாய் நீண்ட மாதம் பயிற்சி மேற்கொண்டார். அவர் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.
ரமாபாய் மட்டுமல்லாது அவரது கொள்ளுப் பேத்தியும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது கொள்ளுப் பேத்தி ஷர்மிளா சங்வான் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெகதீஷ் சர்மா (82) இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஒன்றிய இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி ரமாபாயை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது மதுராந்தகம் யூத்!