புவனேஸ்வர் : ஒடிசா மூன்று ரயில்கள் விபத்தில் உயிரிழந்தவர்களில் 101 பேரை அடையாளம் காணுவதில் தொடர் சிக்கல்கள் நிலவுவதாக கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில் 275க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். 900 பேர் வரை மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 200 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இண்டர்லாக்கிங் மற்றும் சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 பேரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புவனேஸ்வர் மருத்துவமனைகளில் உள்ள 193 சடலங்களில் 80 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் 55 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
200க்கும் மேற்பட்ட அழைப்புகள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், மோசமான உடல் நிலை மற்றும் தெளிவற்ற முகம் உள்ளிட்ட காரணங்களால் சடலங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக டி.என்.ஏ பரிசோதனை மூலம் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 193 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.
மேலும் அனைத்து உடல்களும் உரிய செயல்முறைக்ளுக்கு பிறகு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்தார். சவக்கிடங்குகளில் இருந்து வீட்டிற்கு சடலங்களை உறவினர்கள் கொண்டு செல்ல வாகனம் உள்ளிட்ட வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மூன்று ரயில்கள் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது.
இதையும் படிங்க : World Pest Day 2023: பூச்சிகளை விட்டு சற்று தள்ளியே இருங்கள்!