மகாராஷ்டிர மாநில அரசியலில் மூத்தத் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் பேத்தியும், அகமது நகர் மக்களவை உறுப்பினர் சுஜய் விகே பாட்டீலின் மகளுமான அனிஷா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார். உடனடியாக , தனது தந்தையிடம் பிரதமரைச் சந்திக்க தன்னை அழைத்துச் செல்லுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஆனால், அதற்கு பாட்டீல், பிரதமர் மோடி பிஸியான மனிதர். அவரைச் சந்திக்க முன் அனுமதி வாங்காமல் போக முடியாது என மறுத்துள்ளார். இதனால், கவலையடைந்த அனிஷா, தனது முயற்சியைக் கைவிடவில்லை. உடனடியாக, தந்தையின் மடிக்கணினியிலிருந்து பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அந்த அஞ்சலில், “ஹலோ சார், நான் அனிஷா. உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் மின்னஞ்சலைப் பார்த்த பிரதமர் உடனடியாக பதில் அளித்துள்ளார்.
அதில் அவர், “டாட் கே சாலி ஆவ் பீட்டா (தயவுசெய்து விரைந்து வாருங்கள்)” எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதிலைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார் அனிஷா. உடனடியாகத் தந்தையிடமும் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, விகே பாட்டீல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவுடன், பிரதமர் மோடியின் முதல் கேள்வியே, “அனிஷா எங்கே?” என்பதுதான். பிரதமரைப் பார்த்த பூரிப்பிலிருந்த அனிஷா, தனது மனத்திலிருந்த கேள்விகளை அடுக்கத் தொடங்கினார்.
பிரதமர் மோடியிடம், ‘இது உங்கள் அலுவலகமா, உங்கள் அலுவலகம் எவ்வளவு பெரியது, நீங்கள் நாள் முழுவதும் இங்கேயே அமர்ந்திருப்பீர்களா?’ எனத் தொடர் கேள்விகளை எழுப்பினார். சிறுமியின் வருகையால் மகிழ்ந்த பிரதமர், பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். சுமார் 10 நிமிட சந்திப்பில், அனிஷாவும், பிரதமரும் விளையாட்டு, படிப்பு, அவர்களின் தனிப்பட்ட ஆர்வம் தொடர்பாக பேசியுள்ளனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி சிறுமியிடம், இன்று உங்களைச் சந்திக்க வந்துள்ளேன், உங்களுடன் பேச விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இறுதியாக, அச்சிறுமி மோடியிடம், நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர், எப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவீர்கள் எனக் கேட்டார்.
அவ்வளவுதான், பிரதமர் மோடியும், அங்கிருந்தவர்களும் சிரிக்கத் தொடங்கினர். அப்போது, எப்போதும் சீரியசாக இருக்கும் அந்த இடமே சிரிப்பலையால் கலகலவென ஆனது. அவ்வளவு பிசியான நேரத்திலும், சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய பிரதமருக்குப் பாராட்டுகள் குவியாமலா இருக்கும்.
இதையும் படிங்க: உள்நாட்டு விமானங்களில் 72.5 விழுக்காடு பயணிகளுக்கு அனுமதி