டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “கரோனா பாதிப்பாளர்கள் 0.46 விழுக்காட்டினருக்கு வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2.31 விழுக்காட்டினர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4.51 விழுக்காடு பாதிப்பாளர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பை தடுக்க அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தினேன். கரோனா பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிப்பது, உயிரிழப்பை தடுப்பது என ஆலோசித்தோம். கரோனா பாதிப்பினால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து 1.28 விழுக்காடாக உள்ளது.
உயிரிழப்பை குறைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசித்துவருகிறோம். நாட்டில் கடந்த 7 நாள்களில் 149 மாவட்டங்களில் கரோனா பாதிப்புகள் இல்லை, 8 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக கரோனா பாதிப்பு இல்லை. மூன்று மாவட்டங்களில் கடந்த 21 நாள்களாக கரோனா பாதிப்பு இல்லை.
இதேபோல், 28 நாள்களாக 63 மாவட்டங்களில் கரோனா பாதிப்புகள் இல்லை, இதுவரை 9 கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சத்து 91 ஆயிரத்து 511 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம். முதல்கட்டமாக 89 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 54 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேர்கள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி மாநில கரோனா கட்டுப்பாடு நடைமுறைகள் என்னென்ன?