திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாகக் குடிநீர் வராமல், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து நகராட்சி ஆணையரிடமும், கவுன்சிலரிடமும் பலமுறை மனு அளித்தும், செவி சாய்க்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், ஆலங்காயத்திலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில், காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தாலுக்கா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.