தஞ்சாவூர்: நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கி வரும் 13ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டது. அதில், 7ம் நாளான நேற்று முன்தினம் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதேபோல, தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோயில்களான கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு ராஜேஸ்வரி அலங்காரமும், காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் மற்றும் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரமும், சியாமளாதேவி அம்மன் கோயிலில் ஆண்டாள் அலங்காரமும் சிறப்பாகச் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.