விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு அடுத்த தம்பிப்பட்டியைச் சேர்ந்தவர் பாதுஷா. இவர் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் கயிறு தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இரண்டு தொழிலாளர்கள் இங்கு பணி புரிந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நாரில் தீப்பிடித்து மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.