ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழந்ததால் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அன்றாட தேவைக்கு கடம்பூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்று வருகின்றனர். மேலும், மலைப்பகுதியில் விளையும் காய்கறிகள், தானியங்களை சரக்கு வாகனம் மூலம் அனுப்புகின்றனர். இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடம்பூர் மலைப்பாதை வழியாக பயணிக்கின்றது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கடம்பூர் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், பாறைகள் சாலையில் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வாகனம் சாலையில் செல்லாத காரணத்தினால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது சாலையின் நடுவே விழுந்த பாறைகளை ஜேசிபி வரவழைக்கப்பட்டு அகற்றும் பணி நடந்து வருகிறுது. இதனால், அப்பகுதியில் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.