தேனி: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடிநாயக்கனூர் அருகே இருக்கும் குரங்கணி மற்றும் கொட்டக்குடி மலைப்பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள நீர் நிலைகளில் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை உருவாகியுள்ளது. இதில் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
இதனால் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், மூன்று நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.