கைகளில் சரவெடியைக் கொளுத்தி சாலையில் தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள்.. அடையாளம் காணும் பணியில் போலீசார்! - YOUTHS DIWALI CELEBRATION
🎬 Watch Now: Feature Video
Published : Nov 1, 2024, 6:53 PM IST
கோயம்புத்தூர்: சில கட்டுப்பாடுகளுடன் நேற்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தீபாவளி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரே மாதிரியான வண்ண உடைகளை அணிந்து ஊர்வலமாக வந்த இளைஞர்கள், தங்களது இருசக்கர வாகன ஹாரன்களை ஒலிக்க வைத்து, கூச்சலிட்டு கைகளில் வண்ண புகை கக்கும் பட்டாசுகளை ஏந்தியும், கைகளில் சரவெடிகளை ஏந்தி வெடிக்கச் செய்கின்றனர். அப்போது உடலில் பட்டாசு தீ விழுந்தவுடன் அதை அங்கு நின்றிருந்த பொதுமக்கள் முன்பாக வீசி எறியும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
பேருந்து நிறுத்தத்தின் முன்பாக அரை மணி நேரம் இருந்த அவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “தீபாவளி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. தற்போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வெளியானதை தொடர்ந்து, அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.