பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றும் தனியார் லாரி.. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்! - waste water pouring in public place - WASTE WATER POURING IN PUBLIC PLACE
🎬 Watch Now: Feature Video
Published : May 14, 2024, 5:32 PM IST
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, மாங்காடு, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், வெள்ளவேடு போன்ற பகுதிகளில் செயல்படக்கூடிய தனியார் கழிவுநீர் அகற்றும் லாரிகள் அப்பகுதியில் சேகரிக்கும் மனித கழிவுகளைத் திறந்த வெளியிலும், மழை நீர் கால்வாயிலும், நீர்நிலைகளிலும் வெளியேற்றி விட்டுச் செல்கின்றன.
இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதேபோல், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் கழிவுநீர் லாரிகள் மீது உள்ளாட்சித் துறை, காவல் துறை போன்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை - பெங்களூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழஞ்சூர் பகுதியில், தனியார் கழிவு நீர் வாகனம் ஒன்று, அப்பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில், மனிதக்கழிவு நீரை கொட்டும் காட்சிகளை அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.