“இப்படி ஒரு விழாவா..” துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விளக்குமாறு அடி திருவிழா! - BROOMSTICK FESTIVAL AT Maravapatti
🎬 Watch Now: Feature Video
Published : May 2, 2024, 10:53 PM IST
தேனி: ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா மூன்று நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் முதல் இரண்டு நாட்களில் வழக்கமான வழிபாடுகளான பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பிற கிராம கோயில் திருவிழாக்களில் மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றிக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், மறவப்பட்டி கிராமத்தில் விழாவின் கடைசி நாளில், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மே 2) கிராம மக்கள் துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டு தங்களின் மாமன், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக் கொண்டாடினர். இவ்வாறு கொண்டாடப்படுவதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும், குடும்பத்தில் முன்பகை உள்ள மாமன் - மைத்துனர்கள், ஒருவருக்கொருவர் துடைப்பதால் அடித்துக் கொள்வதால் தங்களது பழைய விரோதத்தை கைவிட்டு மீண்டும் ஒற்றுமை ஆவார்கள் என்பதும் ஐதீகமாக உள்ளது.