வாரயிறுதி நாட்கள் எதிரொலி: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. கடைகள் அடைப்பால் கடும் அவதி! - Courtallam - COURTALLAM
🎬 Watch Now: Feature Video
Published : Aug 11, 2024, 1:03 PM IST
தென்காசி: வார இறுதி நாட்களை முன்னிட்டு தென்காசி குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராடி செல்கின்றனர்.
இந்நிலையில் குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்தானது சீராக வந்து கொண்டிருக்கும் நிலையில் வார இறுதி நாட்களான நேற்றும் இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, மெயின் அருவி பகுதியில் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று குற்றாலம் மெயின் அருவி பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்தினால் சுற்றுலா பயணிகள் உணவுக்காக அருவி பகுதியில் இருந்து வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்தில் இருந்து கடைகளுக்கு வாடகை முழுவதும் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் கடைகளை காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.