ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய சென்னியம்மன் கோயில்.. கரையோரத்தில் அம்மனை வைத்து தரிசிக்கும் பக்தர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2024, 12:42 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் நடுவே அமைந்துள்ள சென்னியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அம்மனை தரிசிப்பதற்காக விழா காலங்களில் மட்டும் அல்லாது மற்ற நாட்களிலும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் வருகை புரிந்து வழக்கம்.
இந்நிலையில், தென்பெண்ணையாற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையாலும் கே.ஆர்.பி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், தற்போது ஆற்றில் சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் நடுவே அமைந்துள்ள சென்னியம்மன் கோயில் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் பக்தர்கள் அம்மனை தரிசிக்க முடியாமல் ஆற்றுக் கரையோர பகுதியில் அம்மனை வைத்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் அம்மனை தரிசிக்க வரும் சிலர் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். ஆயினும் கோயில் நிர்வாகம் சார்பில் எவ்வித எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்படவில்லை. ரோந்து பணிக்காக சென்ற செங்கம் காவல்துறையினர் இதனை சுட்டிகாட்டி ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் காவல்துறையினர் இல்லாத நேரங்களில் தடையை மீறி சிலர் குளித்து வருகின்றனர். எனவே ஆற்றில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பலகைகள் வைத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.