“பத்து பதினஞ்சு நாளா அலையுறோம்.. பருப்பு இருந்தா பாமாயில் இருக்கிறதில்ல..” கோவில்பட்டி அருகே வேதனை! - Palm oil issue in Ration shops

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 4:43 PM IST

thumbnail
பொதுமக்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பாரதி நகர் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பாரதி நகர், சாஸ்திரி நகர், போஸ் நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அமுதம் நியாய விலைக்கடை மூலம் 1,600 ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அக்கடைக்கு எடையாளர் நியமிக்கப்படாததாலும், கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் மிஷினில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக நாள் ஒன்றுக்கு 15 நபர்களுக்கு மட்டுமே அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், ஊழியர் ஒருவரே பதிவு செய்வதிலும், பொருட்களை வழங்குவதாலும், மிகவும் காலதாமதம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, பருப்பு இருப்பு இருந்தால் பாமாயில் வரவில்லை, பாமாயில் இருந்தால் பருப்பு வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும், ஒரு பாமாயில் பாக்கெட்டுக்காக 4 மணி நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது எனவும் அப்பகுதியைச் சேர்ந்த வயதான பெண்மணி வேதனையுடன் தெரிவிக்கிறார்.

எனவே, கூடுதலாக மேலும் ஒரு நியாய விலைக்கடை அமைக்கப்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் என்றும், அரசு அதிகாரிகள் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.