தஞ்சாவூர் கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி துவக்கம்! - கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி
🎬 Watch Now: Feature Video
Published : Feb 25, 2024, 11:17 AM IST
தஞ்சாவூர்: தமிழ்நாடு நீர்வளத்துறை, திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்திற்குட்பட்ட மிகவும் பழமையான கள்ளப்பெரம்பூர் ஏரி மற்றும் அள்ளுர் ஏரி புனரமைக்கும் பணி பூமி பூஜையுடன் நேற்று (பிப்.24) தொடங்கி நடைபெற்றது.
இந்த தூர்வாரும் பணியினை தஞ்சாவூர் எம்.பி பழனிமாணிக்கம், எம்எல்ஏ சந்திரசேகரன், ஊராட்சி குழுத்தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கள்ளப்பெரம்பூர் ஏரி: கள்ளப்பெரம்பூர் ஏரி 640 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஆகும். இந்த ஏரியின் மூலம் 2 ஆயிரத்து 662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வெண்ணாற்றின் கிளை வாய்க்காலான ஆனந்த காவேரி வாய்க்கால் கச்சமங்கலம் அணைக்கட்டு மேல்பகுதியின் வலது கரையில் பிரிந்து கள்ளப்பெரம்பூர் ஏரியில் கலக்கிறது.
ஏரியின் நீளம் 3 ஆயிரத்து 218 மீட்டர் ஆகும். 41.82 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரியில் 8 மதகுகள் உள்ளது. சமீப காலமாக ஏரியில் நீர் சேமிப்பு பகுதி குறைந்து பாசனத்திற்கான தண்ணீர் அளவு குறைந்தது.
இதனையடுத்து ஏரி புனரமைப்பு பணி ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பில் தற்போது நடைபெறுகிறது. இந்த பணியின் மூலம் மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், ஏரியை தூர்வாரி மணல் குன்றுகள் அமைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.