நெல்லையப்பர் திருக்கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - Nellai News
🎬 Watch Now: Feature Video
Published : Jan 28, 2024, 8:22 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோயில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் உலா வரும் நிகழ்வைத் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று (ஜன. 28) வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்காகக் கோயிலில் இருந்து சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். அங்கு சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட சாமி சிலைகளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாரதனை நடைபெற்றது.
அதன் பின்னர், சந்திர புஷ்கரணி என்ற வெளித் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து, தெப்பத்தில் சப்பரம் 11 சுற்றுக்கள் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.