பத்திரகாளியம்மன் கோயிலில் பரோட்டா பிரசாதம்.. போட்டி போட்டிக்கொண்டு வாங்கி ருசித்த பக்தர்கள்! - prasadam
🎬 Watch Now: Feature Video
Published : Sep 18, 2024, 5:38 PM IST
தென்காசி: ஆலங்குளத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசி மற்றும் புரட்டாசி முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நிகழாண்டு திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.
புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, 1008 குடம் மஞ்சள் தண்ணீர் அபிஷேகம் என நாள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 207 பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு படையல்களுடன் சாம பூஜை நடைபெற்றது.
அப்போது ஸ்ரீ பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரோட்டா பிரசாதம்: திருவிழா நிறைவு நாளன்று பிரசாதமாகப் பரோட்டா மற்றும் சென்னா மசாலா வழங்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை தயாரான சுமார் 10,000 பரோட்டா, சுடச்சுடப் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி சாப்பிட்டனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை ஆகியவை பிரசாதமாக வழங்கி வரும் நிலையில் பரோட்டா விநியோகம் செய்யப்படுவது தமிழ்நாட்டிலேயே இங்குதான் முதன்முறை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.