புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பட்டமளிப்பு விழாவில் சக மாணவிகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! - college convocation - COLLEGE CONVOCATION
🎬 Watch Now: Feature Video
Published : Apr 10, 2024, 5:34 PM IST
அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் உள்ள நேஷனல் கலை கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் சிலம்பு செல்வன் தலைமை வகித்தார். மேலும், திரைப்படப் பாடலாசிரியர் அறிவுமதி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அப்போது, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாக்யராஜ் என்பவரது மகள் கவுசல்யா, இளங்கலை பயோடெக் பட்டம் பெறுவதற்காக வந்திருந்தார். இவர் கடந்த எட்டு மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை, சக மாணவிகள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் தூக்கிக் கொண்டு சென்று பட்டம் பெற வைத்தனர். இந்த சம்பவம் அரங்கில் காத்திருந்த அனைத்து மாணவ, மாணவிகளையும், பார்வையாளர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாவிட்டாலும், கல்வி மீது இருந்த ஆர்வத்தால் தீவிரமாக படித்து பட்டம் பெற்ற கௌசல்யா, கல்லூரி அளவில் சிறந்த கபடி வீராங்கனையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.