பாழடைந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி வாகனம்.. அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம்!! - Sivakasi Corporation vehicle

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 3:48 PM IST

thumbnail
பாழடைந்த நிலையில் உள்ள மாநகராட்சி வாகனம் (Credit - ETV Bharat Tamil)

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணிகளில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த குப்பை அள்ளும் வாகனங்கள் பழைய இரும்புக்கடைக்கு செல்லும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சிவகாசி நகர் பகுதி, காமராஜர் பூங்கா பகுதிகளில் குப்பை சேகரிக்கும் நான்கு சக்கர வேன் ஒன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஓட்டுநர் இருக்கை அருகேயுள்ள கதவு மற்றும் எதிர்புறம் உள்ள கதவு இரண்டும் உடைந்து தொங்கியபடி உள்ளது. உடைந்த கதவுகளை கயறுகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. நகருக்குள் இந்த குப்பை அள்ளும் வாகனம் செல்லும் சமயங்களில் கயறு அறுந்து கதவு விழுந்துவிடும் வகையில் தொங்கியபடியே செல்கிறது.

இதனால் இந்த குப்பை வாகனத்தின் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் சாலைகளில் நடந்து செல்பவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. உயிர் பலி வாங்கும் முன்பே இந்த குப்பை அள்ளும் வாகனத்தை மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரி வருவாய் பெற்று வரும் சிவகாசி மாநகராட்சியில், குப்பைகளை அகற்றுவதற்கு கூட ஒரு உருப்படியான வாகனம் இல்லையா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகும் அபாயம் உள்ளது.

உடனடியாக இந்த குப்பை அள்ளும் வாகனத்தை தடை செய்ய வேண்டும். மேலும், பழுதான நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களையும் விரைவாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.