நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் திடீர் புகை.. சிவகங்கை பேருந்து நிலையத்தில் பரபரப்பு! - Sivaganga Bus Stand - SIVAGANGA BUS STAND
🎬 Watch Now: Feature Video


Published : Mar 24, 2024, 9:44 PM IST
சிவகங்கை: மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசுப் பேருந்து, சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, பேருந்தின் இன்ஜினில் திடீரென ஏற்பட்ட தீயால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அவர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
மதுரையிலிருந்து வந்த அரசுப் பேருந்து ஒன்று, நாட்டரசன் கோட்டை பகுதிக்குச் செல்வதற்காக சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு இன்று (மார்ச் 24) வந்துள்ளது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் கிறிஸ்துதாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஓட்டுநர், பேருந்தை சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய போது, திடீரென பேருந்தில் தீப் பற்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, பேருந்தின் இன்ஜினில் இருந்து அதிக சத்தத்துடன் புகை கிளம்பியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள், அரசுப் பேருந்தின் எஞ்சின் சத்தத்தைக் கேட்டு அலறி அடித்து ஓடினர்.
இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்த சாலையோரக் கடைகளை போலீசார் உடனடியாக அகற்றினர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக பேருந்தில் இருந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.