ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா:சயன சேவை நிகழ்ச்சி கோலாகலம்! - Aadipura festival in SRIVILLIPUTHUR
🎬 Watch Now: Feature Video
Published : Aug 6, 2024, 1:37 PM IST
விருதுநகர்: 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். லட்சுமியின் அம்சம் என்று கூறப்படும் ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் என்று ஆன்மீக ஐதீகம் உண்டு. இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தை, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையான தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா கடந்த ஜூலை 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் தேதி 5 கருட சேவை நடைபெற்றது. ஆடிப்பூர திருவிழா உற்சவத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப் பூரம் அன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
வழக்கமாக எல்லா ஊர்களிலும் ஸ்ரீ ரங்கநாதரின் காலடியில் தான் ஸ்ரீ லட்சுமி தேவி இருப்பார். ஆனால் இங்கு மட்டும் தான் ஸ்ரீ லஷ்மி தேவியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்து ஸ்ரீ ரங்கநாதர் படுத்திருப்பார். இக்காட்சியைக் காண விருதுநகர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.