நத்தத்தில் ஆட்டோ மோதி தலைமை ஆசிரியர் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி! - Retired Headmaster dead
🎬 Watch Now: Feature Video
Published : Mar 12, 2024, 4:17 PM IST
திண்டுக்கல்: நத்தத்தில் சாலையில் நடந்து சென்ற ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது ஆட்டோ மோதியதில், தலைமை ஆசிரியர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காட்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (72). ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் நத்தம் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று (மார்ச் 11) காலை பால் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்த நிலையில், நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற ஆட்டோ இவர் மீது மோதியது. இதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் ஆறுமுகம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது, இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமையாசிரியர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சாலை அருகில் இருந்தவர்கள் அதிமுக கட்சிக் கொடியை நடுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். தற்போது, இது குறித்த சிசிடிவி காட்சி வெளியானதால் மனிதாபிமானம் எங்கே சென்றது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.