புரட்டாசி பெளர்ணமி; திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்! - Girivalam
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது, உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில். இக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையைச் சுற்றி, 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
அதன்படி, புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் நடந்து சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். குறிப்பாக, புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 11.27 மணிக்கு தொடங்கி இன்று காலை 9.10 நிறைவடைந்தது.
இதனை முன்னிட்டு, அருணாசலேஸ்வரரை தரிசிக்க அதிகாலை முதலே வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ராஜகோபுரம் முன்பு நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்து இருந்தனர். தொடர்ந்து, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மனை தரிசனம் செய்துவிட்டு 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் நடந்து சென்றனர்.
முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆகம விதிப்படி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையாமனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.