பொது கழிவறை இல்லாமல் அவதி - மாவட்ட ஆட்சியரிடம் மன்றாடும் கிராம மக்கள்! - Theni News
🎬 Watch Now: Feature Video
Published : Jan 29, 2024, 10:01 PM IST
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராயப்பன்பட்டி ஊராட்சியில் சுமார் 12 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த ராயப்பன்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்குத் தினமும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், ராயப்பன்பட்டி ஊராட்சியில் பொது கழிவறை இல்லாததால், அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வருகைதரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 26-ஆம் தேதி ராயப்பன்பட்டி ஊராட்சியில் 7.5 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டும் பணி தொடங்கப்பட்டது.
அதன் பிறகு இந்த பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாகப் பதிலளிக்காமல் அலட்சியப்படுத்துவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். எனவே மீண்டும் கட்டுமான பணியைத் தொடங்கி பொதுக் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.