மினி டிரக் மோதி பாமக பிரமுகர் உயிரிழப்பு.. இழப்பீடு கோரி உறவினர்கள் போராட்டம்! - மினி டிரக் மோதி விபத்து
🎬 Watch Now: Feature Video
Published : Mar 3, 2024, 3:34 PM IST
திருவாரூர்: காக்கா கோட்டூர் பகுதியில் மினி டிரக் மோதி பாமக பிரமுகர் உயிரிழந்தது குறித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டி உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவாரூர், நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட மகிழஞ்சேரி கீழத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (45). இவரது மனைவி பிரியா. இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், தனது வயலில் போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக என்ஜினுக்கு டீசல் வாங்குவதற்கு, இருசக்கர வாகனத்தில் காக்கா கோட்டூர் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மினி டிரக், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து நன்னிலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்பொழுது, சக்திவேலின் உறவினர்கள், அவரது உடலை எடுக்கவிடாமல், உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.