ஆற்காடு அருகே பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம்; ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பாமக பசுமை தாயகம் அமைப்பினர்..!
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் அருகே, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு, பாமக பசுமை தாயகத்தின் சார்பில், பொதுமக்கள் ஒப்பாரி வைத்து, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு முதல் கீழ் விஷாரம் பகுதி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக, அப்பகுதியின் சாலை ஓரத்தில் உள்ள பல்வேறு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று (பிப்.15) கீழ்விஷாரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி அகற்றப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, “மரங்களை காப்போம் மழைநீர் பெறுவோம்” என கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, சாலையின் ஓரத்தில் இருந்த அனைவருக்கும் குடையாய் பயனளித்த ஆலமரத்திற்கு, பாட்டாளி மக்கள் கட்சி பசுமை தாயகத்தின் சார்பில், இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலமரத்திற்கு ஒப்பாரி வைத்து, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.