குடந்தையில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயனுக்கு எதிராக புகைப்படங்களை எரித்து ஆர்ப்பாட்டம்! - Kamal Haasan
🎬 Watch Now: Feature Video
Published : Feb 21, 2024, 3:58 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரது புகைப்படங்களை தீயிட்டு எரித்து, காலணிகளால் அடித்தும் அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமலஹாசன் நிறுவன தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன் 2' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், பட்டியலின மக்களை இழிவாக சித்தரித்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, தஞ்சை மாவட்ட செயலாளர் தை.சேகர் தலைமையில் இன்று (பிப்.21) பத்து பெண்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு, கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் புகைப்படங்களுடன் அவர்களுக்கு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அவர்களது புகைப்படங்களை காலணிகளால் அடித்தும் சாலையில் போட்டு மிதித்து அவமதித்ததுடன், அவர்களது புகைப்படங்களையும் தீயிட்டு எரித்தனர். பின்னர், தங்களது காரில் வைத்திருந்த உருவ பொம்மையை எரிக்கக் கொண்டு வந்தனர். அப்போது, அவர்களை கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையைக் கைப்பற்றி, தண்ணீர் ஊற்றி எளிதில் தீப்பற்றாமல் தடுத்து நிறுத்தினர்.
பிறகு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் புகைப்படங்களை எரித்த அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் வேனில் ஏற்றிக்கொண்டு போய், தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.