வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம்..செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்!
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில், 2020ஆம் ஆண்டு உதயமானது. அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் 7 மாடி கட்டடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று (மார்ச் 4) திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அடுத்தபடியாக, 3 மாவட்டத்தைச் சேர்ந்த 12,653 பயனாளிகளுக்கு ரூ. 655.44 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
தற்போது முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்ட 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 8 ஏடிஎஸ்பிக்கள் மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 1,745 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், வாழை மரங்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்னொளியில் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பார்வையிட அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள், செல்போன்களில் புகைப்படங்கள் செல்கின்றனர்.