மாசி மகப் பெருவிழா: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பண வழிபாடு!
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: மாசி மகத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மயிலாடுதுறை புனிதக் காவிரி துலா கட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்து, தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில், மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறை நகரின் நடுவே ஓடும் காவிரி ஆறு, காசிக்கு நிகரானதாகக் காவிரி துலா கட்டமாகத் திகழ்கிறது.
உலகப் புகழ்பெற்ற இந்த மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினங்களில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் அளிப்பது வழக்கம்.
அதன்படி, இன்று (பிப்.24) மாசி மகத்தை முன்னிட்டு, புனிதக் காவிரி ஆற்றின் துலா கட்ட தீர்த்த படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வருகை புரிந்து பித்ருக்கள் தோஷம் நீங்கத் தங்கள் முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
கடந்த அமாவாசை தினங்களில் காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் இருந்ததால், தர்ப்பணம் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இதனால், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில், புனிதப் புஷ்கரத் தொட்டியில் மின் மோட்டார் மூலம் விடப்பட்ட சிறிய தண்ணீரில் பொதுமக்கள் நீராடி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.