மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு - ரூ.1.5 கோடி காணிக்கை வசூல்!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 29, 2024, 11:01 PM IST
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டன. ரூபாய் 1.5 கோடி ரொக்கமாகப் பக்தர்கள் காணிக்கை என கோவில் நிர்வாகம் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இன்று (ஜன. 29) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அதன் 10 உபகோயில்களின் உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் திறப்பின் போது திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர், இந்த திருக்கோயிலின் தக்காரான மதுரை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வார்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கமாக 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரத்து 711 ரூபாயும், தங்கம் 468 கிராமும், வெள்ளி 835 கிராமும் மற்றும் அயல் நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 488 எண்ணிக்கையிலும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.